வீழ்ச்சி பாதையில் தமிழ் மொழியும் தமிழர்களும்

தமிழ் மொழி இன்று எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? வேற்று மொழிக் கலப்பு, தமிழ்ப் பெயர்களின் மறைவு, வரலாற்று திரிபுகள் மற்றும் சமூகப் பிரிவினைகள் எவ்வாறு நமது மொழி மற்றும் அடையாளத்தைப் பாதிக்கின்றன என்பதை இந்தக் கட்டுரை ஆதாரப்பூர்வமாக ஆராய்கிறது. தமிழ் மொழியின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு, அறிஞர்கள் மற்றும் ஒவ்வொரு தமிழரும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளையும் தீர்வுகளையும் விரிவாக விளக்குகிறது. தமிழின் எதிர்காலம் யார் கைகளில் உள்ளது என்பதை சிந்திக்க வைக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரை.

Arul Pandiyarasan

3/12/2019

ஆனால், இந்தப் புதிய கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் சூழலில், பெரும்பாலும் ஆங்கில மொழியே ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக, உலகின் பல மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன; மேலும் பல மொழிகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பிற்கும் அதற்கேற்ற புதிய சொற்களை ஒவ்வொரு மொழியும் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தமிழ் மொழியைப் பொறுத்தவரை, புதிய கருத்துகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ற சொற்களை உருவாக்கும் மரபு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், அந்தப் புதிய தமிழ்ச் சொற்களை மக்கள் பரவலாகப் பயன்படுத்துகிறார்களா என்றால், அதற்கான பதில் வருத்தத்திற்குரிய வகையில் இல்லை என்றே இருக்கிறது. இதற்குக்காரணம், புதிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்தக் கருவிகள், பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ஆங்கிலச் சொற்களையே நாம் அப்படியே அன்றாடப் பயன்பாட்டில் ஏற்றுக்கொள்கிறோம். இதனால், நம் மொழியின் சொல்வளம் வளர வேண்டிய இடத்தில், வேற்றுமொழிச் சொற்களின் பயன்பாடே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

"வீழ்ச்சி பாதையில் தமிழ் மொழியும் தமிழர்களும்" என்ற இந்தத் தலைப்பு, உங்களிடம் பயத்தையோ பதற்றத்தையோ ஏற்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, தமிழ் மொழியின் பெருமைமிக்க வரலாற்றுக்கும், இன்று அதன் வளர்ச்சிப் பயணத்தில் நிலவும் உண்மையான சூழலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்காகவே இந்தத் தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழ் மொழியும் தமிழர்களும் எதிர்கொண்டு வரும் சவால்கள் என்ன? அவற்றிற்கான காரணங்கள் என்ன? அவை எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்? அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகள் என்ன? போன்ற முக்கியமான கேள்விகளுக்கான விடைகளை, வரலாற்றுப் பின்னணி, தற்போதைய களநிலை மற்றும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

அறிவியல் புரட்சியும் வேற்று மொழி கலப்பும்:

இன்று உலகம் முழுவதும் தொழில்மயமாக்கலும் உலகமயமாக்கலும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சிகள் தீவிரமடைந்து வருவதால், தினந்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் விளைவாக, புதிய கருவிகள், பொருட்கள், தொழில்நுட்பங்கள் தொடர்ந்து சந்தைக்கு அறிமுகமாகின்றன. மக்களும் அவற்றை ஆர்வத்துடன் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

புதிய சொற்கள் உருவாக்கமும் மொழிப் பயன்பாடும்:

இன்றும் நம் அன்றாடப் பேச்சிலும் எழுத்திலும், நமக்கே தெரியாமல் பல வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. கிபி 1 ஆம் நூற்றாண்டு காலங்களில் மிக சொற்பமாக இருந்த சமஸ்கிருத சொற்களின் எண்ணிக்கை அதற்கு அடுத்த வந்த ஆண்டுகளில் மிக அதிகமாக பயன்படுத்த பட்டுள்ளது. இதன் விளைவாக, பல தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல விலகி, அவற்றுக்குப் பதிலாக வேற்று மொழிச் சொற்கள் நிலைபெற்று வருகின்றன.

இந்தக் கட்டுரையில்கூட முடிந்தவரை ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனால் அது எளிதான செயல் அல்ல. காரணம், எது இயல்பான தமிழ்ச் சொல், எது பிற மொழியிலிருந்து வந்த சொல் என்பதைப் பலரால் எளிதில் பிரித்தறிய முடியாத நிலை இன்று உருவாகியுள்ளது. இதுவே தமிழ்ச் சொல்வளத்தின் மீதான நமது பரிச்சயம் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

அதனால் பாமர மக்களோ, நடுத்தர மக்களோ முழுமையான செந்தமிழிலேயே பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. ஆனால், நமது அன்றாடப் பேச்சில் தேவையில்லாமல் கலக்கும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்களை அடையாளம் கண்டு, அவற்றுக்குப் பதிலாக இயன்றவரை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க முடியும். இது சிறிய முயற்சியாகத் தோன்றினாலும், அதன் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும்.

ஒரு மொழி வாழ்வது அதன் இலக்கியங்களால் மட்டும் அல்ல; அந்த மொழியை மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதால்தான். எனவே, தமிழின் பயன்பாட்டை நாமே உணர்வுபூர்வமாக அதிகரித்தால்தான் அதன் சொல்வளமும், வரலாறும், தொடர்ச்சியும் பாதுகாக்கப்படும். மொழியைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழி, அதை தொடர்ந்து வாழ்வில் பயன்படுத்துவதுதான்.

தமிழ் மொழியின் வரலாற்றைப் பார்த்தால், பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், வெளிநாட்டு தொடர்புகள், ஆரியர் வருகையால் சமஸ்கிருத மொழி வருகை ஆகியவை தமிழின் வளர்ச்சியிலும் பயன்பாட்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சங்க காலத்தைத் தொடர்ந்து, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலங்களிலும் பிற மொழிச் சொற்கள், குறிப்பாக சமஸ்கிருதச் சொற்கள், ஓரளவு தமிழில் கலந்தன. பின்னர் பல நூற்றாண்டுகளில் அந்தக் கலப்பு மேலும் அதிகரித்தது.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.