கரைந்த என் உயிர்ச்சித்திரம்
கரைந்த என் உயிர்ச்சித்திரம் என்பது ஒரு தாயின் அன்பையும், தியாகத்தையும், தாயை பிரிந்த ஒரு குழந்தையின் பிரிவின் வலியையும் மனதை உருக்கும் வகையில் வெளிப்படுத்தும் உணர்வுமிக்க கவிதையாகும். குழந்தையின் வாழ்க்கையில் தாய் என்பது வெறும் உறவல்ல; வழிகாட்டும் ஒளி, பாதுகாப்பான அரவணைப்பு, தன்னலமற்ற அன்பின் வடிவம் என்பதை இயற்கையின் பல அழகிய உவமைகள் மூலம் இந்தக் கவிதை சித்தரிக்கிறது.
Arul Pandiyarasan
1/18/2005
நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே
நிறைமதி நிலவாய் —
என் வானம் நிரப்பியது உன் முகம்
புயலின் பேரிரைச்சலுக்குப் பின்
அணைக்கும் தென்றலாய் —
என் முகம் வருடியது உன் கரங்கள்
பழங்களின் இனிமையில்
மாங்கனியின் சுவையாய் —
மிளிர்ந்தது உன் நிறம்
பறவைக் கூட்டங்களில்
வெண்புறாவின் அமைதியாய் —
வாழ்ந்தது உன் பண்பு
இரவின் இருளில்
மின்மினிப் பூச்சியின் ஒளியாய் —
என் பாதை காட்டியது உன் பாதங்கள்
தூக்கத்தையும் துறந்து
விழித்திருந்த இதயமாய் —
என்னை காத்தன உன் கண்கள்
தளர்ந்து விழும் ஒவ்வொரு தருணத்திலும்
என்னைத் தாங்கிய பூமியாய் —
விரிந்தது உன் அரவணைப்பு
வாழ்வெனும் சிலுவைச் சுமையை
சிரிப்பின் மலர்களால் மறைத்தவளே —
அதுவே உன் தியாகம்
கைம்மாறு கருதாத
கருணை மேகமாய் — அன்பை
பொழிந்தது உன் வள்ளன்மை
தேனீக்களுக்கே பொறாமை தரும்
இடைவிடா சுறுசுறுப்பில் —
இயங்கியது உன் உயிர்த்துடிப்பு
காலம் என்னும் நதியில்
கரைந்து போன என் உயிர்ச்சித்திரமே...
மீண்டும் எப்போது வருவாய், என் தாயே?
தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?


| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.