திரும்பிப் பார்த்த பாதைகள்
திரும்பிப் பார்த்த பாதைகள் என்பது 20 ஆண்டுகளுக்கு பிறகு நான் என் ஊருக்கு திரும்பி செல்லும் போது எப்படி இருக்கும் என்று கற்பனையில் எழுதிய கவிதை. காலம் ஊரின் முகத்தையும், இடங்களின் உருவத்தையும் மாற்றிவிட்டாலும், குழந்தைப் பருவத்தின் நினைவுகளையும் உண்மையான உணர்வுகளையும் மாற்ற முடியவில்லை. இழந்த பாதைகள், மறைந்த விளையாட்டு மைதானங்கள், வறண்ட குளங்கள், வெறுமையான தோப்புகள்—இவை அனைத்தும் வாழ்க்கையின் நிலையாமையை நினைவூட்டுகின்றன. ஆனால் அந்த அனுபவங்கள் மனதில் அரும்பொருளாய் நிலைத்து, சோர்வின் தருணங்களில் ஆறுதலாக மாறுகின்றன. ஊரை விட்டு திரும்பிய பயணத்தில், உடன் வந்தது பொருட்கள் அல்ல; வாழ்நாள் முழுவதும் அழியாத நினைவுகள்தான்.
Arul Pandiyarasan
2/15/2005
இருபது ஆண்டுகளுக்குப் பின் என் கால்கள்
மீண்டும் ஊர் மண்ணை நோக்கிப் புறப்பட்டன
உடல் பேருந்தில் பயணித்தாலும், மனம்
கடந்த காலத்தின் தெருக்களிலேயே அலைந்தது
இன்பங்களையும் துன்பங்களையும் எந்தச் சலனமுமின்றி
மீண்டும் ஒருமுறை தொட்டுப் பார்த்தது மனம்
அந்த நீண்ட பயணம் இலக்கை அடைவதற்காக மட்டுமல்ல;
என்னை மீண்டும் என்னிடம் அழைத்துச் செல்லவும் உதவியது
தூக்கம் கண்களைத் தீண்டவில்லை; ஊர் மட்டும்
நினைவுகளைத் தீண்டிக் கொண்டே இருந்தது
அதே ஊர் தான்; ஆனால் முதன்முறையாக உலகைக் காணும்
குழந்தையின் கண்களைப் போல என் பார்வை காத்திருந்தது
கடந்த காலத்தை நினைத்து மனம் நெகிழ்ந்தது
நினைவுகள் மனதை வருடிச் சென்றன
நினைவுகளோடு உரையாடிக் கொண்டிருந்த மனம்
எப்போது உறக்கத்திடம் சரணடைந்தது எனக்கே தெரியவில்லை
அலாரத்தின் அழைப்புக்காகக் காத்திருக்காமலேயே
ஐந்து மணிக்குக் கண்கள் தாமாகவே திறந்தன
இருள் மெல்லப் பின்வாங்க, விடியல்
வானத்தின் விளிம்பில் விரிந்தது
ஒவ்வொரு நொடியும் என் கண்களின்
எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருந்தது
பேருந்து என் சிறுநகரின் எல்லையைத் தொட்டது
உள்ளம் நிறைந்த பூரிப்புடன் இறங்கினேன்
சுற்றிலும் பார்வையைச் சுழற்றினேன்; தெரிந்த இடங்கள் கூட
புதிதாக அறிமுகமானவை போலத் தோன்றின
நடைபாதையோரம் நின்றிருந்த சிறு கடைகளின் இடத்தில்
இன்று உயர்ந்த கட்டிடங்கள் நின்று கொண்டிருந்தன
குண்டும் குழியுமாக இருந்த சாலைகள்
தார் சாலைகளாகப் பதவி உயர்வு பெற்றிருந்தன
காலம் நகர்ந்தது என்பது நாட்காட்டியில் இல்லை;
என் நகரின் தெருக்களில் தான் அதை முதலில் கண்டேன்
மக்களின் அன்றாட இயக்கங்களில்
நாகரிக வளர்ச்சியின் தடங்கள் தென்பட்டன
பேருந்தைப் பிடிக்க பதற்றமாக ஓடும்
மனிதர்களைக் காணவில்லை
சந்தைகளும் ஒரு காலத்தின் கூச்சல், இரைச்சலை
எங்கோ தொலைத்துவிட்டிருந்தன; அறிந்த நகரம்
அறிமுகமில்லாத முகத்துடன் நின்றது; அந்தச் சிறுநகரின்
மாற்றம் என்னை மௌனமாக வியக்க வைத்தது
என் ஊர் இப்போது எப்படி இருக்கும்? என்ற
கேள்விக்கு என் கற்பனைகள், பேருந்தை விட
வேகமாக ஊரை நோக்கி ஓடின
சிந்தனைகளிலிருந்து மீண்டபோது
என் ஊருக்குச் செல்லும் பேருந்தில்
நான் ஏற்கனவே ஏறியிருந்தேன்
என் ஊரென்ற அழகியை காண மனம்
ஜன்னலோர இருக்கையையே தேர்ந்தெடுத்தது
மாறியது மனிதர்களின் வாழ்க்கை; மாறாதது
வயல்களின் பசுமை; அது காலத்திற்கே
சவால் விடுக்கும் தொன்மையின் கையொப்பம்
அந்த அரை மணி நேரம், பயணத்தை விட
இயற்கையை ரசிப்பதிலேயே கரைந்தது
நிறுத்தம் வந்ததும் இறங்கி நடந்தேன் ஆனால்
என்னை முன்னே நகர்த்தியது மனதின் ஆவல்தான்
அறிமுகமான உலகிற்கே புதிதாக
வந்தவனைப் போன்ற உணர்வு
என் கால்கள் நடந்தது பாதையில் அல்ல;
நினைவுகளின் தடங்களில்
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
என் ஊர் மெதுவாக உருவம் பெற்றது
பச்சைச் சேலை போர்த்தி, பனித்துளிகளை
நகைகளாக அணிந்து, புதுமணப்
பெண்ணின் நாணத்தோடு நின்றிருந்தது
இயற்கையான என் பேரழகி
ஒப்பனையால் பிறந்த அழகல்ல அது;
இயற்கை தன் கைகளால் வடித்த பேரழகு
அவளின் அழகில் ஆடம்பரமில்லை
அது மனதை அமைதிப்படுத்தியது
சில அழகுகள் கண்களுக்காக அல்ல; பல
ஆண்டுகளாகக் காத்திருந்த மனங்களுக்காக மலர்கின்றன
எதிரே வந்த முதியவர்கள், யார் வீட்டுப் பிள்ளை?
என்று உரிமையோடு நலம் விசாரித்தனர்
வீட்டை நெருங்க நெருங்க மனம் பரபரப்புக்குள்ளானது
வீட்டின் வாசல் அப்பாவின் வரவேற்பாலும்,
சகோதரிகளின் புன்னகையாலும் நிறைந்திருந்தது
அந்த மகிழ்ச்சியின் நடுவிலும், அம்மாவின் இல்லாமை
அமைதியாக மனதைத் தொட்டது
தாயின் அரவணைப்பை நினைவாகக் கூட
சுமக்காதவன் நான்; தாயின் கையைப் பிடித்து
நடந்த நினைவு எனக்கில்லை
வீட்டைவிட அன்பு முதலில் நிரம்பியது
அக்கம் பக்கத்தினரின் வருகையால்
மறுநாள் காலை, என் மனம் நண்பர்களைத் தேடின
காலம் சிலரை என்னிடமிருந்து தூரமாக்கியிருந்தது
மனம் விட்டு பேசிட கணம் நொடியில் கடந்து போனது
நான்கு நாட்கள் எப்படி கடந்தன என்பதே தெரியவில்லை
இளமையில் துள்ளித் திரிந்த இடங்களை மீண்டும்
கண்ட மகிழ்ச்சி மனம் முழுவதும் நிறைந்திருந்தது
இன்னும் ஒரு நாளில் ஊரை விட்டுப்
புறப்பட வேண்டியிருந்தது
கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும்
மனம் அமைதியாக அளந்து பார்த்தது
இன்று வசதிகள் அதிகம்; வாழ்க்கையும் சுகமாகியுள்ளது
ஆனால் காரணமின்றி சிரித்த அந்த நாட்கள்
மட்டும் எங்கேயோ மறைந்துவிட்டன
எங்கள் காலடிச் சுவடுகளைச் சுமந்த
ஒற்றையடிப் பாதைகள் இப்போது
காணாமல் போயிருந்தன
நாக்கில் எச்சில் ஊறவைத்த
அந்தச் சிறு பலகாரக் கடைகளும்
நினைவுகளாகிவிட்டிருந்தன
மட்டைப் பந்தின் சத்தம் ஒலித்த மைதானமும்
காலத்தின் வரைபடத்தில் மறைந்துவிட்டது
சண்டைகள் மறைந்து விடவில்லை;
சண்டையிட நண்பர்கள்தான் இல்லை
என் குழந்தைப் பருவத்தைச் சுமந்த பள்ளி
காலத்தின் கைகளில் புதிய முகம் பெற்றிருந்தது
நீந்திக் களித்த கிணறும், பழகிய குளமும்
நீரின் சலசலப்பை இழந்து
மணலின் மௌனத்தை மட்டும் சுமந்தன
பழம் திருடித் திரிந்த தோப்புகள் இன்று
மரங்களற்ற வெறுமை நிலங்களாகிவிட்டன
காலம் அவற்றின் உருவங்களை
அமைதியாக அழித்துவிட்டிருந்தது
நிகழ்வுகள் மட்டும் மனதில்
அரும்பொருளாய் பதிந்திருந்தன
இடங்கள் மாறலாம்; உண்மையான
உணர்வுகள் மாறுவதில்லை
சோர்வின் நேரங்களில் திறந்து பார்க்க
அந்த நினைவுகளை மனத்தின்
ஓர் அறையில் பத்திரமாக வைத்துப் பூட்டிவிட்டேன்
இடங்கள் மாறின, பொருள்கள் மறைந்தன
நினைவுகள் மட்டும் என் மனதில்
அரும்பொருளாய் நிலைத்தன
ஊரை விட்டு வந்தேன்; நினைவுகளை மட்டும்
என்னோடு அழைத்து வந்தேன்.
தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?


| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.