சீமானால் திராவிட அரசியலை வீழ்த்த முடியுமா? | தமிழர் ஆட்சி சாத்தியமா?
திராவிட அரசியலுக்கு மாற்றாக தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் சீமானின் அரசியல் பயணம் எதை நோக்கிச் செல்கிறது? சாதி, அரசியல் போட்டிகள், மக்கள் மனநிலை ஆகிய தடைகளைத் தாண்டி தமிழ்த் தேசியத்தை வளர்த்து, தமிழர் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியுமா? திராவிடத்தை சீமான் வீழ்த்த முடியுமா, தமிழ்த் தேசியம் தமிழக அரசியலில் வெல்லுமா என்பதற்கான ஆழமான அரசியல் பார்வையே இந்தக் கட்டுரை.
அருள் பாண்டியராசன்
6/10/20191 min read
திராவிடத்தை சீமான் வீழ்த்த முடியுமா? | தமிழர் ஆட்சி சாத்தியமா? | தமிழ் தக்கார் | முழு காணொளி

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும், மக்களுக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில், நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கை பலரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் 1% வாக்குகளை மட்டுமே பெற்ற கட்சி, மூன்றே ஆண்டுகளில் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் 4% வாக்குச் சதவீதத்தைப் பெற்றிருக்கிறது. இது, சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பின் வெளிப்பாடாகத்தான் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும், தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னிறுத்த வேண்டும், தமிழ் மொழி, தமிழர் மற்றும் தமிழ்நாட்டிற்கு நன்மையளிக்கக்கூடிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்துவது இவரது அரசியல் கொள்கையாக இருக்கிறது. “திராவிடத்தை ஒழித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்” என்று வெளிப்படையாகச் சவால் விடுத்து செயல்பட்டு வருகிறார். சீமானின் உணர்ச்சிபூர்வமான பேச்சும், ஆவேசமான உடல்மொழியும், தமிழை முன்னிறுத்தி அவரது கட்சி செயல்படும் விதமும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சான்றாக இருக்கின்றன.
சீமானால் திராவிடத்தை வீழ்த்த முடியுமா? தமிழ்த் தேசியம் சாத்தியமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, தமிழர்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற கோரிக்கை சரியானதா, தமிழ்த் தேசியக் கொள்கைகள் இன்றைய சூழலில் அவசியமானவையா என்பதைப் பார்க்கவேண்டும்.
இதையும் பார்க்க: தமிழர்கள் ஒரு போதும் மறக்கக் கூடாத 5 பேர்!
2019 தேர்தல் முடிவுகளின் பாதை:
தமிழர் ஆட்சி பிரிவினைவாதமா?:
“தமிழர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும், தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்வைத்து சீமான் பேசினாலே, அவர் இனப்பிரிவினையைத் தூண்டுகிறார்” என்ற குற்றச்சாட்டும், “பிரிவினைவாதி” என்ற முத்திரையும் அவர் மீது விழுகிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களைப் பார்க்கும்போது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்த மக்களே ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். இதிலிருந்து விலக்குப் பெற்ற ஒரு மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் திராவிடக் கொள்கை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட திராவிடம் என்கிற ஓர் அமைப்பு, தமிழகத்தில் மட்டும் செயல்படக்கூடிய நிலையில் இருக்கிறது. காரணம், மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்கள் திராவிடக் கொள்கையை ஏற்காமல், தங்கள் மொழியை மட்டும் முன்னிறுத்தித் தனியாகச் செயல்படுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்த் தேசியம் என்னும் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, இன்னமும் திராவிடத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுகிறது. காரணம், தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் சாதி, மதம், இனம் என்ற பேதமில்லாமல் ஆட்சிக்கு வரலாம் என்ற நிலையைத் திராவிடம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், இதற்காக நாம் கொடுக்கக்கூடிய விலை, தமிழ் மொழி மற்றும் தமிழர் நலன் பாதிக்கப்படுவதுதான்; இதிலிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையும் இதுதான்.
தமிழ் மொழியையும் தமிழரையும் ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட திராவிடம், இன்று சமஸ்கிருதத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறது. நிலம், மொழி, மக்கள், பண்பாடு என அனைத்தும் சமஸ்கிருதமயமாக்கப்படுகின்றன. இதனால், “தமிழர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்” என்கிற கோரிக்கை பலதரப்பட்ட மக்களிடமிருந்தும், தமிழறிஞர்கள், வரலாற்று மற்றும் மொழியியல் அறிஞர்களிடமிருந்தும் முன்வைக்கப்படும் மிக முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக அடிப்படையில் பார்க்கும்போது, இயல்பாக எழுந்த இந்தக் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை; இது முழுக்க முழுக்க நியாயமானதாக இருக்கிறது. அதனால், தமிழ்த் தேசியக் கொள்கையும், “தமிழர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்” என்கிற கோரிக்கையும், அதன் அவசியமும் நிச்சயமாகத் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
யார் தமிழர்? தமிழர் ஆட்சி சாத்தியமா?:
“தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்” என்கிற கோரிக்கை முன்வைக்கப்படும் போது, “யார் தமிழர்?” என்கிற கேள்வி மறுபுறம் முன்வைக்கப்படுகிறது. இந்தக் கேள்விக்கு இரண்டு அடிப்படைகளில் எளிதாக நாம் தீர்வையும் பதிலையும் அளிக்க முடியும். தாய்மொழியாகத் தமிழ் மொழியைப் பேசக்கூடியவர்கள் தமிழர்கள் என்பது ஒரு இயல்பான அடிப்படையாகும். மறுபுறம், சாதிகளின் அடிப்படையில் தமிழகத்தின் பூர்வீகக் குடிகளின் உண்மையான ஆதாரத்தையும் நாம் பெற முடியும். தமிழக அரசு நினைத்தால், இதைச் சரியாக ஆய்வு செய்து, யார் தமிழர், எது தமிழ்க் குடிகள் என்பதை அறிவிக்க முடியும். அதற்கான வழிமுறைகளை மிக எளிதாக உருவாக்க முடியும் என்பது நடைமுறைக்குச் சாத்தியமான ஒன்றுதான். இதை மனதில் வைத்துக்கொண்டுதான், “தமிழர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்” என்கிற கோரிக்கையை சீமான் முன்வைக்கிறார்.
இது பார்ப்பதற்கு மிக எளிதாக இருந்தாலும், இதை முழுமையாகச் செயல்படுத்த நாம் செய்ய வேண்டிய களப்பணி அளப்பரியது. MGR போன்ற மிகப்பெரிய தலைவர்கள் கூட, பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டுதான் ஆட்சி அமைக்க முடிந்தது. ஆனால், சீமான் போன்றோர் ஒரு தனிநபராக, அவரது தலைமையின் கீழ், நாம் தமிழர் கட்சியின் மூலம் தமிழ்த் தேசியத்தையும், “தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்” என்கிற கோரிக்கையையும் செயல்படுத்த நினைப்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. இது நடக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
தமிழ்த் தேசியத்தின் மிகப்பெரிய சவால்:
தமிழ்த் தேசியம் மற்றும் “தமிழர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்” என்கிற கோரிக்கைக்கு எதிராகப் பல தடைகள் தற்போதைய தமிழ்நாட்டில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இன்றைக்கு தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசினாலும், பல சாதிப் பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். கிராமம், சிறுநகரம், பெருநகரம் என எல்லா இடங்களிலும், இடத்திற்கு ஏற்ப சாதி என்ற அமைப்பு அரசியல் வழியாகச் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் அனைவரையும் மொழியின் அடிப்படையில் தமிழர்கள் என்று ஒற்றுமைப்படுத்தி இணைப்பது, நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.
“திராவிடம் தமிழ் மொழிக்கு எதிராகச் செயல்படுகிறது” என்கிற பிரச்சாரம் மட்டும், திராவிடத்தை வீழ்த்திவிட முடியாது. ஏனென்றால், இங்கு தமிழ்த் தேசியவாதிகள் தமிழையும், தமிழ்த் தேசியத்தையும் முன்னிறுத்தித் தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் வேளையில், தமிழைக் காக்க உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட திராவிடத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி, சனாதனவாதிகள் தொலைநோக்குப் பார்வையுடன் மறைமுகமாகத் தமிழுக்கு எதிரான பல்வேறு செயல்திட்டங்களைச் செயல்படுத்துகின்றனர். இதற்கான ஆதாரங்கள் வரலாற்று நூல்களில் ஏராளமாக இருக்கின்றன. இதுகுறித்து ஒவ்வொன்றாக இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கொள்கை அரசியலின் சவால்:
சனாதனவாதிகள் தமிழகத்தில் தமிழ் மொழியில் பேசினாலும், களத்தில் நேரடியாகத் தமிழுக்கு எதிராக எதையும் பேசுவதில்லை; கருத்தும் தெரிவிப்பதில்லை. ஆனால், சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும் பொருட்டு, தொலைநோக்குப் பார்வையோடு தொடர்ந்து தங்களுடைய செயல்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். இதைத் தெரியாமல், மக்கள் தமிழ்த் தேசியவாதிகள் சனாதனவாதிகள் மீது வெறுப்புப் பிரச்சாரம் செய்வதாக நினைத்து, இவர்களை வெறுக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியில்லாமல் திராவிடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள். இன்னொருபக்கம், MGR, அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என்று ஒற்றைத் தலைமையை மட்டுமே மையப்படுத்தி அரசியல் செய்யப்படுவதால், இங்கு மொழி அடிப்படையில் கொள்கைக்காக மக்கள் ஒன்றிணைவதும், அதற்காகச் செயல்படுவதும் சாத்தியமில்லாததாக இருக்கிறது.
இப்படி ஒற்றைத் தலைமை அரசியல் வழியில் செல்லும் மக்களை, மொழிக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர்த்து, அவர்களைக் கொள்கை அரசியலுக்கு மடைமாற்றுவது, நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து கொள்கை அடிப்படையில் நாம் தமிழர் கட்சி செயல்படும்போது, நாளடைவில் மக்கள் மனதில் மாற்றங்கள் தானாகவே, மிக மெதுவாக உருவாகும். ஆனால், மக்கள் அனைவரும் அப்படி மாறுவதற்குக் காலம் நீண்டுகொண்டே செல்லும். காரணம், சனாதனவாதிகள் அப்படிப்பட்ட தமிழுக்கு ஆதரவான அரசியல் களத்தை உருவாக்க அனுமதிப்பதில்லை.
தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சியின் சவால்:
திராவிடக் கட்சிகளோடு, பிற சிறிய கட்சிகளும் தமிழக அரசியல் களத்தில் செயல்படுகின்றன. புதிய கட்சியாக, மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். தற்போது, நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறார். இப்படி, புதிய கொள்கைகளோடு புதிய கட்சிகள் நிறைய உருவாவதும், தமிழ்த் தேசியத்தின் கொள்கைக்கும், நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டுக்கும் மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் Dr. ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக தலைவர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியை நடத்தி வரும் வேல்முருகன் என, இப்படி இன்னும் நிறைய கட்சிகளோடு சேர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளைத் தவிர, பிற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே கட்சியாகச் செயல்படாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் தமிழ் மொழியை முன்னிறுத்தும் தமிழ்த் தேசியக் கொள்கைகளை வலியுறுத்தும் விதமாக ஓர் அணியாகவாவது செயல்படுவது மிகவும் அவசியம். ஆனால், அப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலை தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை.
அதனால், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று செயல்பட்டு, தமிழ்த் தேசியக் கொள்கையையும், “தமிழர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்” என்கிற கோரிக்கையையும் செயல்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. எல்லாச் சமூக மக்களுக்கும் முன்னுரிமை கொடுத்து கட்சியை வழிநடத்தி, மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியக் கொள்கையை உயிர்ப்புடன் வைத்திருப்பதே மிகப்பெரிய சவால். இதை, சீமானின் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்க வேண்டும்.
சாதியைத் தாண்டி தமிழர் ஒற்றுமை:
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், இனங்களின் அடிப்படையில் பிளவுபட்டிருந்த மக்களை ஒரே நாடாக மாற்றுவது மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. ஆனால், ஜனநாயகத்தை வலியுறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் குடியரசை உருவாக்கி, ஒரே நாடாக மாற்றுவதில் வெற்றி கண்டோம். கிட்டத்தட்ட, தமிழகமும் அப்படிப்பட்ட சுதந்திரம் பெறாத இந்தியாவைப் போன்ற ஒரு பிளவுபட்ட நிலையில்தான் இன்னமும் இருக்கிறது. ஆனால், ஒரு சிறு வித்தியாசம்தான் இருக்கிறது; ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் கொண்ட தமிழக மக்களை ஓர் இனமாக ஒன்றுசேர்த்துச் செயல்படுவதில் இன்னமும் சிக்கல்கள் இருக்கின்றன. காரணம், சாதி அமைப்புகள்தான் இங்கு அனைத்தையும் தீர்மானிக்கின்றன; தமிழ்த் தேசிய அரசியல் ஒற்றுமையைத் தவிர. இதை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் பார்க்கலாம். சாதிப் பற்றை விட்டுவிட்டு, மொழிப்பற்றும் இனப்பற்றும் மேலோங்கும்போதுதான் தமிழ்த் தேசியம் வளரும்; தமிழர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்த் தேசியம் சாத்தியமாகுமா? :
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்த் தேசியத்திற்கு யார் பொறுப்பேற்பது, யார் இதை வழிநடத்துவது, யார் தலைமையின் கீழ் செயல்படுவது என்கிற போட்டி, சாதி அமைப்புகளுக்குள்ளும், தலைவர்களுக்குள்ளும், கட்சிகளுக்குள்ளும் இருப்பதால்தான் தமிழ்த் தேசியம் வளராமல் இருக்கிறது. எப்படி சல்லிக்கட்டிற்காக மக்கள் சாதி, சமூகக் கட்டுப்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, களத்திற்கு வந்து அறப்போராட்ட வடிவில் போராடினார்களோ, அதேபோல் தமிழ் மொழி உணர்வுடன் ஒரு அணியாகச் செயல்படும்போது மட்டுமே தமிழ்த் தேசியம் சாத்தியமாகும்; ஒரு தமிழர் தமிழ்நாட்டை ஆள முடியும். இதற்காக நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதுவரைக்கும், இந்திய அரசியலமைப்பு வழங்கும் ஜனநாயக வழியில், தமிழரல்லாத ஒருவர் தமிழ்நாட்டை ஆள முடியும் என்கிற நிலையே தொடரும்; தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் இருப்பார்கள் என்பதே தற்போதைய தமிழக அரசியல் சொல்லும் உண்மை.
புதுப்பிக்கப்பட்ட தேதி: 28-09-2026
| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.