இயற்கை சொல்லாத பதில்
இந்தக் கவிதை, இயற்கையின் அமைதியான வாழ்விலிருந்து மனித மனம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய வாழ்க்கைப் பாடத்தை உணர்த்துகிறது. பதிலில்லா கேள்விகளில் சிக்கித் தவிக்கும் மனம், இயற்கையின் ஒவ்வொரு உயிரும் நிகழ்காலத்தோடு இசைந்து வாழ்வதை உணரும்போது தெளிவையும் மனவலிமையையும் பெறுகிறது. தேவையற்ற சிந்தனைகளை விடுத்து, இயற்கையைப் போல நிகழ்காலத்தில் வாழ்வதே உண்மையான விடை என்பதை இந்தக் கவிதை நினைவூட்டுகிறது.
Arul Pandiyarasan
8/4/2005
விடை தெரியா கேள்விகளோடு
விழித்துக் கொண்டிருந்த நான்
பதிலைத் தேடி சாலையோர
பூங்காவில் ஆழ்ந்த சிந்தனையில்
பூக்களிடம் கேட்டால் வாடிவிடுமோ
பொன்வண்டிடம் கேட்டால் பறந்து விடுமோ
குருவிகளிடம் கேட்டால் கீச் ஒலி நின்றிடுமோ
காற்றின் தாளத்திற்கேற்ப அசைந்திடும்
மரத்திடம் கேட்டால் அசையாமல் நிற்குமோ என்று
நினைத்துக் கொண்டே கேட்கவில்லை
அவைகளின் செயல்கள் என் சிந்தனை
தீயை பலமாக மூட்டியது
சிந்திக்காத உயிர்கள் கூட
நிகழ்காலத்தை இழந்து வாழ்வதில்லை
ஆறறிவு பெற்ற மனிதனோ,
தன் எண்ணங்களிலேயே துன்புற்று உழல்கிறானே
தன் மனச்சிறையில் இருந்து
வெளிவர முடியாமல் தவிக்கிறானே
இயற்கை என்னும் குடும்பத்தில்
அதன் விதிகளோடு இசைந்து வாழும்
ஐந்தறிவு உயிர்களை விட மனிதனுக்கே
மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது
கேள்விகளே என்னை பலவீனப்படுத்தின
விடை கிடைத்த பின்பே
மனம் மீண்டும் வலிமை பெற்றது
தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?


| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.