மனம் மலர்ந்தால்

மனம் மலர்ந்தால்... என்பது மனித மனத்தின் குழப்பம், ஆசை, கர்வம், பொறாமை ஆகியவற்றை வென்று, சுயஅறிவும் தன்னம்பிக்கையும் வழியாக உள்ளத்தை மலரச் செய்யும் ஆழமான சிந்தனைக் கவிதை. வெற்றி வெளியில் இல்லை; மனதின் மாற்றத்தில்தான் வாழ்க்கையின் உண்மையான திருப்பம் தொடங்குகிறது என்பதை உணர்த்துகிறது. மலரைப் போல மணம் பரப்பும் மனதை உருவாக்கினால், வாழ்க்கையும் இயல்பாகவே அழகாக மலரும் என்ற நம்பிக்கையை இந்தக் கவிதை விதைக்கிறது.

Arul Pandiyarasan

1/4/2007

ஏன் இந்தக் குழப்பம்?
விடை தேடி சிந்தித்தேன்... ஆ!
சிந்தித்த அளவுக்கு

குழப்பமே பெருகியது

அளவுகடந்த சிந்தனை ஆபத்தானதோ?

ரம்மியமான மனதை

ரணகளப்படுத்தி விட்டேனே

ஒரு நொடி சிரித்து

ஒரு நாள் அழுத அனுபவம்

ஓ மனமே! மலரைப் போல

வாழத் தெரியவில்லை

பிறந்ததன் பொருள் அறிந்து
பிறர் முகத்தில் புன்னகை பூக்கச் செய்கிறது

தன்னை நுகர்வோரின்
மனம் சிலிர்க்கச் செய்கிறது

தன் அழகால் பிறரையும் அழகாக்கும் குணம்

செடியை பிரிந்தாலும்

கலங்காத நெஞ்சம்

குணம் மாறா பூங்கொழுந்தே

இந்த அழகான

மலரை போல் வாழ தெரியவில்லை

என் மனமே!

இந்த பூக்களை போல இல்லாமல்

முட்களாய் மாறி போனதென்ன

என் மனமே!

எத்தனை ஆசைகள்

பொறாமை, கர்வம்

எண்ணிலா பிரச்சனைகள்

என் மனமே நீ

அழகான மலரில்லை - முட்களை மட்டுமே
வளர்த்துக் கொண்ட கள்ளிச்செடி

மனதை ஆள்பவனே
அகத்தில் வல்லவன்
அப்படியொரு வெற்றி
உன்னால் முடியுமா, என் மனமே?

பிடிவாதம் எங்கிருந்ததோ...

கர்வம் எங்கிருந்ததோ...

சுயநலம் எங்கிருந்ததோ...

எல்லாம் ஒன்றாய்

உருவெடுத்தது

அது நீயா? - என் மனமே!

வாழ்க்கை பாதையில்

இத்தனை முட்களா?

அதில் இத்தனை வலிகளா?

குழப்பத்தில் தத்தளித்து வாடிய

என் மனதை
மீண்டும் மலரச் செய்ய
யாரால் முடியும்?

துரத்திய எண்ணங்கள்
மீண்டும் திரும்பி வருகின்றன...
முருங்கைமரம் ஏறிய
வேதாளம் போல

ஐயோ! - என் மனமே?

என் முயற்சிகளில்

வெற்றி கிட்டவில்லை

தோல்விதான்

என் வாழ்க்கையின் முடிவா?

உயர்ந்த குறிக்கோள் இல்லாமல்
உறுதியான செயல்கள் இல்லாமல்
உண்மையான உழைப்பு இல்லாமல்
இடைவிடாத முயற்சி இல்லாமல்...
வெற்றி மட்டும்
எப்படி சாத்தியம்,
என் மனமே?

மணமும் உன்னிடம்...
அழகும் உன்னிடம்...
மென்மையும் உன்னிடம்...
புதுமையும் உன்னிடம்...
மலரே!
இவை அனைத்தும்
உனக்கே சொந்தமா?

இன்று புரிந்தது...
வாழ்க்கையை மாற்றுவது
உலகமல்ல...

மனம்தான்

மற்றவரை அல்ல...
முதலில் உன்னை நேசி
உனக்காக வாழக் கற்றுக்கொள்
மனம் மலர்ந்தால்
வாழ்க்கையும் மலரும்!

தெளிவான முடிவு...
தேடித் தேடி கிடைக்காத
அமுதம்போல்
இன்று எனக்குக் கிடைத்தது!

தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.