தமிழக அரசியலும் 5 தந்திரங்களும்

தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெற அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் ஐந்து முக்கிய அரசியல் தந்திரங்கள் என்ன? சாதி, மதம், கட்சிப் பற்று, வேட்பாளரின் செல்வாக்கு, மாற்று அரசியலைத் தடுப்பது என மக்களின் மனநிலையை அரசியல் எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது. நாம் ஏன் மீண்டும் மீண்டும் ஒரே அரசியல் சுழற்சிக்குள் சிக்கிக்கொள்கிறோம்? இந்த தந்திரங்களைப் புரிந்துகொண்டால்தான் உண்மையான அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியுமா? — சிந்திக்க வைக்கும் கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.

Arul Pandiyarasan

4/27/2019

இந்த இடத்தில், மக்கள் வேட்பாளரிடம் எந்தவிதமான கேள்விகளையும் கேட்காமல், அவரது செயல்பாடுகளைப் பொருட்படுத்தாமல், அறம் தவறிப் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கின்றனர். படித்த இளைஞர்கள் ஓரளவிற்கு அரசியல் புரிதலோடு வாக்களித்தாலும், படிக்காத பாமர மக்கள் இன்னமும் தங்களுக்குப் பிடித்த கட்சி, அந்தக் கட்சியின் தலைவர் அல்லது அந்தப் பகுதியில் செல்வாக்குமிக்க வேட்பாளர் என்ற இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையிலேயே வாக்களிக்கின்றனர். இதைப் புரிந்துகொண்டுதான் ஒவ்வொரு கட்சியும் பணபலம் மிக்க, செல்வாக்குள்ள நபரை வேட்பாளராகக் களமிறக்குகிறது. இதனால், பெரும்பான்மையான மக்கள் யார் சுயநலத்தோடு செயல்படுகிறார்கள், யார் பொதுநலத்தில் அக்கறையுடன் செயல்படுகிறார்கள் என்பதைச் சரியாகக் கணிக்கத் தவறுகிறார்கள். இதைத்தான் அரசியல் கட்சிகள் இன்று ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்குச் சாதகமான ஒரு தந்திரமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கை, அவரது கட்சியின் பலமாக மாற்றுவது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

நாம் 2019 நாடாளுமன்றத் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்கக்கூடிய கட்டத்தில் இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன, என்னென்ன தந்திரங்களை மறைமுகமாகப் பயன்படுத்துகின்றன என்பதை விரிவாகப் பார்க்கப் போகிறோம். பொதுவாக, தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஒரு வியூகத்தை அமைத்து, அதற்குத் தகுந்தபடி பிரச்சாரம் செய்து, மக்களிடம் தங்களது கொள்கைகளைச் சேர்ப்பதுதான் வழக்கமான நடைமுறை. எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளுங்கட்சி செய்யும் தவறுகள், அதனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் உரிமைகள் சரியாகக் கிடைக்காத நிலை ஆகியவற்றை முன்னிறுத்திப் போராட்டங்களாக மாற்றி, அதையே பிரச்சாரமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆளுங்கட்சியாக இருந்தால், அவர்கள் கொண்டு வந்த திட்டங்களையும், செய்த சாதனைகளையும் சொல்லி வாக்குக் கேட்பது வழக்கம். இவை பார்வைக்கு வழக்கமான தேர்தல் நடைமுறைகளாகத் தெரிந்தாலும், இதற்குப் பின்னால் ஒவ்வொரு நிகழ்விலும் அரசியல் தந்திரங்கள் இருக்கின்றன. வெளியில் தெரியும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பின்னால், வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் பல நுட்பமான கணக்குகள் செயல்படுகின்றன. கடந்த கால அரசியல் நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அரசியல் தந்திரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது நமக்குத் தெரியவருகிறது.

வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில், அரசியலில் ஐந்து முக்கியத் தந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இந்த அரசியல் தந்திரங்கள் ஒரு அமைப்பாலும், கட்சித் தலைவர்களாலும் உருவாக்கப்பட்டாலும், அவற்றைச் செயல்படுத்துவது மக்கள்தான். ஆனால், அதை அவர்கள் முழுமையாக அறியாமலேயே, தங்களது இயல்பான வாழ்க்கை ஓட்டத்துடன் இணைந்ததாகச் செய்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில், நல்ல தலைவர்களைத் தேடிக் கண்டறிந்து, அவர்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, அவர்களின் கொள்கைகளைப் பார்த்து வாக்களித்த நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது. பணம் வாங்கிக்கொண்டு, கட்சி, தலைவர், சின்னம் ஆகியவற்றைப் பார்த்து வாக்களிக்கக்கூடிய நிலைக்கு மக்களை அரசியல் கட்சிகள் பழக்கப்படுத்தியிருக்கின்றன.

வேட்பாளரை மையமாக்கும் அரசியல்:

இவ்வாறு, அந்தப் பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவரோ அல்லது சட்டமன்ற உறுப்பினரோ (MLA), ஒரு கட்சிக்காகத் தொடர்ந்து செயல்பட்டு, அந்தக் கட்சியின் மூலம் அந்தத் தொகுதிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கிறார்கள். இவ்வாறு அந்தக் குழுத் தலைவர் சிறப்பாகச் செயல்படும்போது, அவரது கட்சி ஏதேனும் குற்றச்சாட்டுக்கு ஆளானாலும், அது அவரது தனிப்பட்ட செல்வாக்கைப் பெரிய அளவில் பாதிப்பதில்லை. மக்கள் தொடர்ந்து அவரையே சார்ந்திருந்து, அவருக்கே வாக்களித்து, வெற்றி பெறச் செய்கிறார்கள். இன்னொரு புறம், கட்சியின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதபோது, அந்தப் பகுதியின் குழுத் தலைவர் மக்கள் பணியைச் சரியாகச் செய்யாமல், தனக்காகச் சுயநலத்துடன் ஊழல்வாதியாகச் செயல்பட்டாலும் கூட, கட்சியின் மீது கொண்ட பற்றின் காரணமாக மக்கள் அவரையே மீண்டும் வெற்றி பெறச் செய்கிறார்கள்.

மாற்று அரசியல் சக்தியைத் தடுக்கும் தந்திரம்:

காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் ஒரு கட்சியின் ஒட்டுமொத்த அடையாளமாக மக்களால் கொண்டாடப்பட்டதற்குக் காரணம், அவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்காக அரசியல் பணியாற்றியதுதான். ஆனால், இவர்களுக்குப் பிறகு திமுகவிற்கு கலைஞர் கருணாநிதியும், அதிமுகவிற்கு செல்வி ஜெயலலிதாவும் தனி அடையாளங்களாக மாறிச் செயல்பட்டனர். இந்த இரு கட்சிகளின் செயல்பாடுகளில் ஊழல் மலிந்திருந்ததை மக்கள் அறிந்திருந்தும், வேறு வழியில்லாமல், காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இவர்களுக்கே மாறி மாறி வாக்களிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. காரணம், வலிமையான மாற்று அரசியல் சக்தி உருவாக இவர்கள் இடமளிக்கவில்லை. புதிதாக ஒரு கட்சி உருவானால், அந்தக் கட்சியைத் தங்களுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதனால், மக்கள் மாற்று அரசியல் சக்தியைத் தேடுவதற்கே ஆயத்தமாகவில்லை என்பதுதான் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் வரலாறு. இவ்வாறு, ஒரு புதிய அரசியல் சக்தி உருவாவதைத் தொடர்ந்து தந்திரமாகத் தடுத்து, அதன் மூலம் தங்களது அரசியல் இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

அடுத்து, அரசியல் கட்சிகள் கையாளக்கூடிய ஒரு தந்திரம், சாதி மற்றும் மதத்தின் வழியாக மக்களைப் பிரித்து அரசியல் செய்வதாகும். 1980-க்குப் பிறகு, சாதி வாரியாகக் கட்சிகளில் செயல்படுவதும், புதிய கட்சிகள் உருவாவதும் தொடங்கின. இன்றைக்கு, இதில் அதிதீவிரமான மனநிலையில் மக்கள் செயல்படுவதை நாம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல், சாதியும் மதமும் அரசியலின் அடிநாதமாகவும் ஆணிவேராகவும் மாறிவிட்டன என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. மக்கள் மத்தியில் சாதி, மதங்களின் வழியே வெறுப்புணர்வையும் பகையையும் உருவாக்கக்கூடிய நிகழ்வுகள் அரசியல் கட்சித் தலைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது சிறு குழுக்களின் மூலமாகவோ பயன்படுத்தி, மக்களிடையே பிரிவினையைத் தூண்டுகிறார்கள்.

சாதி, மதத்தை அரசியல் ஆயுதமாக்கும் தந்திரம்:

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே ஒரு தந்திரமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டம், உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் சட்ட விதிகளை ஆராய்ந்தறிந்து, இந்தியாவுக்கு உகந்த வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைச் செயல்படுத்தும்போது அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகவும், மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொள்கின்றன என்ற இடத்தில்தான் இது தோல்வியடைகிறது. அரசியல்வாதிகளும், பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகளும், இதை எந்த அளவுக்குத் தங்களுக்குச் சாதகமாக வளைக்க முடியுமோ, அந்த அளவுக்கு வளைத்து, தாங்கள் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், மக்களின் தேவைகள், உரிமைகள் என்று வரும்போது, இதை வளைக்க முடியாத அளவுக்கு இரும்பைப் போன்ற கடினமான தன்மையுடன் செயல்படுகிறது. இவ்வாறு, ஒரு பாரபட்சமான தன்மையுடன் செயல்படக்கூடிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.

இன்று அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகள் மக்களுக்குத் தெரியவந்தாலும், புதிய மாற்றுக் கட்சிகள் உருவாவதையும், அவை வளர்வதையும், அந்த மாற்று அரசியல் கட்சிகளைத் தேடி மக்கள் செல்லாமல் தடுப்பதற்காக அடுத்த தந்திரத்தைப் பயன்படுத்துகின்றன. மாற்று அரசியலை முன்வைத்து ஒரு புதிய கட்சி உருவானால், அந்தக் கட்சி தொடர்ந்து செயல்படுவதற்கும் வளர்வதற்கும் இடையூறாக, ஏற்கனவே இருக்கும் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அதாவது, தானும் நல்லது செய்யமாட்டார்கள்; நல்லது செய்ய வருபவர்களையும் செய்யவிட மாட்டார்கள் என்ற உயர்ந்த சுயநல அரசியல் கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றுகிறார்கள். இதனால்தான், திமுக, அதிமுக ஆகிய இந்த இரண்டு கட்சிகளைத் தவிர, பிற கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது.

சட்டத்தை வளைக்கும் அரசியல் தந்திரம்:

இரு வேறு சாதிக் குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினையை ஒட்டுமொத்த சாதிப் பிரச்சினையாக மாற்றுவது, ஒரு மதத்தை இழிவுபடுத்தும் விதமாகப் பொது வெளியில் பேசுவது, வரலாற்றைத் திரித்துக் கூறி அதன் மூலம் பிரச்சினையைத் தூண்டுவது எனத் தொடர்ந்து வெறுப்பு அரசியலே இன்று நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சாதியைப் புறக்கணித்து சமத்துவத்தை நேசிக்கும் புதிய தலைவர்கள் மாற்று அரசியலை முன்வைத்தாலும், அந்தத் தலைவரின் சாதியை வைத்து மக்களிடையே பிரிவினையையும் வெறுப்புணர்வையும் பரப்புவது தொடர்ந்து நடைபெறுவதால்தான் மாற்று அரசியல் சக்தி வெற்றி பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால்தான், சாதியையும் மதத்தையும் மக்களைப் பிரிக்கும் மிகப்பெரிய ஆயுதமாகவும், மாற்று அரசியலுக்குத் தடைக்கல்லாகவும் அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. மக்கள் ஒன்றுபடும்போது உருவாகும் அரசியல் மாற்றத்தைத் தடுக்க, அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது இந்தத் தந்திரத்தின் மிக ஆபத்தான அம்சமாகும்.

இவ்வாறு, பெரும்பான்மையான மக்கள் இந்த ஐந்து நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் சிக்கிக்கொள்வதால், தொலைநோக்குப் பார்வையோடும், தமிழ் மொழி மற்றும் தமிழக நலன் சார்ந்த பொதுநலப் பார்வையோடும் சிந்திக்கக்கூடிய மக்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். அதனாலேயே, தமிழ் மொழி மற்றும் தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் நாம் வெற்றி பெற முடியாமல் பின்னடைவைச் சந்திக்கிறோம். இன்று அரசியல் கட்சிகள் இந்த ஐந்து தந்திரமான வழிகளைப் பயன்படுத்தி, காலத்திற்குத் தகுந்தவாறான புதிய இலவச அறிவிப்புகளையும், திட்டங்களையும், கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் மக்கள் முன் வைத்து, தங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி அரசியலில் வெற்றி பெறுகின்றன.

இதனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து, பல்வேறு பிரச்சினைகளில் நீதித்துறையின் மூலமே சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. அரசு செயல்படும் விதத்திலும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கான சட்ட நடைமுறையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அநீதிக்கும், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு ஆதரவான சூழலுக்கும் இடமளிக்கும் நிலையிலும் செயல்படுகிறது. இவ்வாறு, பல்வேறு சட்ட விதிகள் குற்றம் செய்பவர்களுக்கு மென்போக்குடன் செயல்படக்கூடிய அளவில், பல குளறுபடிகள் உள்ளன என்று கூறலாம். எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் ஒரு தந்திரமான கருவியாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். சட்டத்தின் நோக்கம் மக்களுக்கு உரிமையையும் பாதுகாப்பையும் வழங்குவதாக இருந்தாலும், அதன் நடைமுறையில் உள்ள இடைவெளிகளை அரசியல் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்வதே இங்கு கேள்விக்குறியாகிறது.

ஒற்றுமையைத் தடுக்கும் அரசியல் தந்திரம்:

மக்களை ஒன்றுபடவிடாமலும், ஒற்றுமையின்றிப் பிரித்து வைத்திருப்பதையும் ஒரு தந்திரமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றன. நாம் மேலே குறிப்பிட்ட நான்கு தந்திரங்களுக்கும் அடிப்படையாகவும், அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும், இந்த ஐந்தாவது தந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். மக்களும் அறியாமலேயே, இந்த ஐந்து தந்திரங்களில் ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த ஐந்து தந்திரங்களும் மக்களின் வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் மிக நெருங்கிய தொடர்பில் இருப்பதால், மக்கள் இதில் ஏதேனும் ஒன்றுடன் சமரசம் செய்துகொண்டு, அதில் சிக்கிக்கொள்கிறார்கள். மக்கள் சுயநலமாகத் தங்கள் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடும், பொதுநலத்தோடும், ஒற்றுமையோடும் செயல்பட முடியாமல் தயங்கி நிற்கிறார்கள். இதை அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

மக்கள் மாறினால் அரசியல் மாறும்:

இவ்வாறு, பிரிவினையில் மக்கள் மூழ்கிக் கிடப்பதால், திறமையான நல்ல நிர்வாகத்தை வழங்கக்கூடிய ஓர் அரசை நம்மால் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. அதற்குப் பதிலாக, இந்த சமூகச் சிக்கலைத் தொடர்ந்து வழிநடத்தக்கூடிய அரசையே நாம் மாறி மாறித் தேர்ந்தெடுக்கிறோம். எப்போது பெரும்பான்மையான மக்கள் சுயநலமில்லாமல், பொதுநலத்தோடு மாற்றத்தை விரும்பி, புதிய கட்சியைத் தேடி பயணிக்கிறார்களோ, அப்போதுதான் ஒரு நல்ல அரசு அமைவதற்கான வாய்ப்பு உருவாகும். அரசியல் கட்சிகள் தங்கள் தந்திரங்களை மாற்றுவதற்கு முன்பாக, அந்தத் தந்திரங்களைப் புரிந்துகொண்டு தங்கள் வாக்கை மாற்ற வேண்டியது மக்களின் கையில்தான் இருக்கிறது.

இந்தக் கட்டுரையின் முழு காணொளியை பார்க்க : ரஜினி – கமலால் திராவிட கட்சிகளை வீழ்த்த முடியுமா?

தேர்தல் அரசியலும் மறைந்திருக்கும் தந்திரங்களும்:

சமீபத்தில் சமூக ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட சல்லிக்கட்டுப் போராட்டம், இளைஞர்களாலும் ஒட்டுமொத்தத் தமிழக மக்களாலும் ஆதரிக்கப்பட்டதால்தான் வெற்றி பெற முடிந்தது. தமிழகம் ஒருமித்த குரலில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசியதால், தமிழக அரசு இதில் விரைந்து செயல்பட்டு, சல்லிக்கட்டைத் தடையின்றி நடத்துவதற்கான சட்டத்தை முன்மொழிந்தது. ஒன்றிய பாஜக அரசும் வேறு வழியின்றி இதற்கு ஒப்புதல் அளித்தது. இதேபோல், தேர்தல் நேரங்களில் நாம் ஒற்றுமையாக இணைந்து செயல்பட முடிவதில்லை. காரணம், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அரசியல் தந்திரங்களின் தாக்கத்தால் மக்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. பொதுநலன் சார்ந்த பார்வையுடன் ஒற்றுமையாகச் செயல்படாமல், மக்கள் பிரிந்து செயல்படுகிறார்கள். மக்களில் ஒரு பிரிவினர் சாதி, மதம், வாக்களிப்பதற்குப் பணம் பெற்றுக்கொள்வது, புதிய அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பது எனச் சுயநலமாகச் செயல்படுகிறார்கள். மற்றொருபுறம், புதிய கட்சி ஆட்சிக்கு வர முடியாது என்கிற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கே வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஊழல், குற்ற வழக்குகள், தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்கள் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களிக்கின்றனர் மக்கள் ஒற்றுமையாகவும், சுயநலமற்ற பொதுநலப் பார்வையுடனும் சிந்திக்கத் தொடங்கும் நாளில்தான், இந்த அரசியல் தந்திரங்களின் தாக்கத்திலிருந்து அவர்கள் விடுபட முடியும்.

| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.