இறுதி தாலாட்டு
தாயை மழலைப் பருவத்திலேயே இழந்த ஒரு மகனின் ஆழமான ஏக்கத்தையும், நிறைவேறாத தாய்ப்பாசத்தின் வெற்றிடத்தையும் இந்தக் கவிதை உருக்கமாகப் பதிவு செய்கிறது. காலனின் இரக்கமற்ற தீர்ப்பை கேள்வி கேட்கும் இந்த வரிகள், அன்பு, பிரிவு, நினைவு ஆகியவற்றின் வலியை மனதை நெகிழச் சொல்லுகின்றன. தாய் இல்லாத வாழ்க்கையின் ஆயுள் முழுதுமான ஏக்கத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு இறுதி தாலாட்டு இது.
Arul Pandiyarasan
6/8/2005
தவழும் வயதிலேயே
தாயை இழந்து விட்டேன்
தாய்ப்பாலின் மணம் மட்டும்
இன்னும் மறக்கவில்லை
இனி படுத்துறங்க
தாய்மடி இல்லை
என்னைக் கொஞ்சிய
அவள் முகம்கூட
நினைவில் இல்லை
தத்தி நடந்து தடுமாறியபோது
தாங்கிக் கொள்ள அவள் இல்லை
இனி எப்போது
அவள் கரம் பிடிப்பேன்?
என் மழலைப் பேச்சைக் கேட்கக் கூட
அவளுக்கு வாய்ப்பில்லை
அப்படி என்ன அவசரம், காலா?
ஆசையோடு வேண்டினாள்... தவமிருந்தாள்...
ஒரு ஆண்மகன் வேண்டுமென்று -
பிரிவைப் பற்றி மட்டும்
காலன் சொல்லவில்லை
நானே அவள் உலகம் என்று நினைத்தாள்
அவளுக்கு நான்
சுகமல்ல, சுமைதான் என்று
காலன் எண்ணிவிட்டான் போல
என் தாயோடு மகனாக வாழ்ந்திட
காலனுக்கு மனமில்லை
காலனின்
இரக்கமற்ற தீர்ப்பு அது
பதறினாள்... அழுதாள்... ஐயோ!
என் மக்கட் செல்வங்களை விட்டுச் செல்கிறேனே...
கிஞ்சித்தும் காலன் இரங்கவில்லை
அவள் மரணப் படுக்கையில் உறங்கிப் போனாள்
தாலாட்டு என்று நினைத்து நானும் உறங்கிப் போனேன்
தாய்க்காக எழுந்த ஒப்பாரி ஓசை கேட்டு...
தொடர்புடைய கவிதைகள்: தமிழ் தக்கார் உருவானது ஏன்?


| © 2026 தமிழ் தக்கார். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.